Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

கரவாகு வட்டையில் 200 ஏக்கரை சுவீகரித்து அரச அலுவலகங்கள் அமைக்கத் திட்டம்!

-அகமட் எஸ். முகைடீன், ஹாசிப் யாசீன்-
கல்முனை மாநகர பிரதேசம் சனத்தொகை அடர்த்தி கொண்ட நெருக்கடியான பிரதேசமாக காணப்படுவதனால் இப்பிரதேசத்தில் அரச அலுவலகங்களை அமைப்பதற்கான காணிகளை பெறுவது சாத்தியமற்றமையினால் கரைவாகு வட்டைப் பிரதேசத்தில் முதற் கட்டமாக 200 ஏக்கர் காணிகளை சுவீகரித்து அப்பிரதேசத்தில் அரச அலுவலகங்கள், பொதுமக்களின் பாவனைக்கான கட்டடங்கள், வர்த்தக கட்டட தொகுதிகள் என்பவற்றை நகர திட்டமிடல் அமைச்சினால் அமைக்க தீர்மாணிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.
கல்முனை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் கல்முனைத் தொகுதி ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் கல்முனை பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பிரதி அமைச்சர் ஹரீஸ் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் வழிகாட்டுதலில் நல்லாட்சி அரசு இவ்வாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக பெருமளவான நிதியினை ஒதுக்கீடு செய்திருக்கின்றது.
இதற்கமைவாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான றவூப் ஹக்கீம் அவர்களுடைய வேண்டுகோளின் பிரகாரம் கல்முனை மற்றும் சம்மாந்துறை நகர அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேற்குறித்த அபிவிருத்தி தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்கும்வகையில் அமைச்சர் றவூப் ஹக்கீமின் அமைச்சில் உயர்மட்டக் கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றது. இதன்போது பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்தவகையில் கல்முனை மாநகர பிரதேசத்தின் சகல பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்வதற்கும், கல்முனை மாநகர பிரதேசம் சனத்தொகை அடர்த்தி கொண்ட நெருக்கடியான பிரதேசமாக காணப்படுவதனால் இப்பிரதேசத்தில் அரச அலுவலகங்களை அமைப்பதற்கான காணிகளை பெறுவதற்கான சாத்தியம் இல்லாமையினால் கரைவாகு வட்டைப் பிரதேசத்தில் முதற் கட்டமாக 200 ஏக்கர் காணிகளை சுவீகரித்து அப்பிரதேசத்தில் அரச அலுவலகங்கள், பொதுமக்களின் பாவனைக்கான கட்டடங்கள், வர்த்தக கட்டட தொகுதிகள் என்பவற்றை அமைக்கவும் தீர்மாணிக்கப்பட்டுள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்முனை புதிய நகர அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் பாரிய வீடமைப்பு கட்டடத் தொகுதியை உருவாக்கி அங்கு குடியேற்றம் செய்யப்போவதாக உண்மைக்குப் புறம்பான தகவல்கள் பரப்பப்பட்டதனால் மக்கள் குழப்பமடைந்திருந்தனர். கல்முனை நகர அபிவிருத்தியில் வீடமைப்பு சம்பந்தமாக எந்தச் சந்தர்ப்பத்திலும் பிராஸ்தாபிக்கப்பட்டது கிடையாது. கல்முனை பிரதேசமானது சகல சமூகத்தவர்களும் வாழ்கின்ற பிரதேசம் என்பதனால் குறித்த ஒரு சமூகத்தை பாதிக்கும் வகையில் எமது அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியாது.
அந்தவகையில் சகல மதங்களையும் சேர்ந்த பிரதிநிதிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு அதன் ஊடாக குறித்த அபிவிருத்தி திட்டத்தில் என்னென்ன விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் ஆலோசனை பெறப்பட்டே தீர்மாணங்கள் மேற்கொள்ளப்படும். எனவே இவ்வவிபிருத்தி திட்டத்தை மக்கள் சந்தேக் கண் கொண்டு நோக்க வேண்டிய அவசியம் இல்லை.
   
தற்போதைய அரசு முன்னெடுக்கின்ற அபிவிருத்தித் திட்டங்கள் எல்லாம் பாரிய அபிவிருத்தி திட்டங்களாக இருக்கின்றது. தற்கால நவீன உலக போக்குக்கு ஏற்ப செயற்படக் கூடிய சாதுரியமான தலைமையாக பிரதமர் இருப்பதனால் பாரிய கொழும்பு அபிவிருத்தி திட்டம் மற்றும் கண்டி, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை என பல வலயங்களை உருவாக்கி அபிவிருத்தி செய்யப்படுகின்றது. அந்தவகையில் கிழக்கு மாகாணத்தின் கேந்திர வர்த்தக மையமாக காணப்படும் கல்முனையினையும் இக்கட்டமைப்புக்குள் பிரதமர் உள்வாங்கி பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளார்.
எனவே இது தொடர்பில் மக்களை தெளிவுபடுத்தி வீண் சந்தேகங்களை இல்லாமல் செய்து கல்முனை நகர அபிவிருத்தியினை மிகவேகமாக முன்னெடுப்பதற்கு அனைவரும் தம்மாலான பங்களிப்புகளை செய்ய முன்வர வேண்டும்.    
மேலும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் கிராமசேவகர் பிரிவுகளுக்கு வழங்கப்படும்  நிதி கடந்த வருடம் வழங்கப்படவில்லை. இதனை குறித்த அமைச்சின் செயலாளருடன் பேசி இம்முறை ஒரு கிராம சேவகர் பிரிவுக்கு 5 இலட்சம் ரூபா அடிப்படையில் நிதி கிடைக்கப் பெற்றுள்ளது. இந்நிதி மூலம் சகல கிராம சேவகர் பிரிவுகளும் உச்ச பயனை அடையச் செய்ய வேண்டும்.
அந்தவகையில் அத்தியவசியமான சில உட்கட்டமைப்பு பணிகளை இதன் மூலம் மேற்கொள்ளலாம். வடிகான் இல்லாத குறுக்கு வீதி பிரதேசங்களில் வடிகாண்களை அமைத்தல் மற்றும் நான்கு கிராம சேவகர் பிரிவுகளை இணைத்து ஒரு சந்தைக் கட்டடம் அமைத்தல் போன்ற வேலைத்திட்டங்களை மேற்கொள்ள முடியும். எனவே குறுக்கு வீதிகளில் வடிகான் அமைப்பதன் மூலம் வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்த முடியும் என உணரப்பட்டால் அப்பிரதேசம் தொடர்பிலும் மேற்குறிப்பிட்டவாறு சந்தைக் கட்டடம் அமைப்பதற்கான பொது இடவசதி காணப்படுவதோடு அத்தேவை உணரப்பட்டால் அது தொடர்பிலும் எழுத்தும் மூலம் பிரதேச செயலாளருக்கு தெரியப்படுத்தினால் அவை தொடர்பான இறுதி முடிவுகளை எம்மால் மேற்கொள்ள முடியும்.   
கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர எனது அழைப்பின்பேரில் அண்மையில் இப்பிரதேசத்திற்கு வருகைதந்து பல வாக்குறுதிகளை அளித்திருக்கின்றார். அந்தவகையில் ஒலுவில் துறைமுகத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்திப்பதற்கும், மீனவர்களின் நீண்ட கால தேவையான தொலைத் தொடர்புசாதன கருவிகளை வழங்குவதற்கும் இணக்கம் தெரிவித்திருக்கின்றார்.
கல்முனை பிரதேசத்தில் அபிவிருத்தி செய்யப்படாத வீதிகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வீதி அபிவிருத்தி திட்டங்கள் மூலம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் இவ்வருடத்தில் கல்முனை பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ளமையினால் இவ்வருடம் கல்முனைக்கு மிக முக்கியமான ஒரு ஆண்டாக  காணப்படுகிறது என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.  

https://www.facebook.com/kalasemnet/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget