Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

சற்று அசந்தால் நல்லாட்சியும் நமது தலையில் மிளகாய் அரைத்துவிடும் - சாய்ந்தமருதில் அமைச்சர் மனோ!

-யூ.கே.காலித்தீன், எம்.வை.அமீர் -
தற்பொழுது ஆட்சி  மாறியுள்ளது, மஹிந்த ராஜபக்ஷவை கதிரையில் இருந்து இறக்கிவிட்டு மைத்ரிபால சிறிசேனவை அக்கதிரையில் ஏற்றி நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கப் போவதில்லை. நாம் ஆட்சியின் பங்காளிகள், படைப்பாளிகள், நல்லாட்சி என்று கூறப்பட்டாலும் அது இன்னும் நம்மாட்சியாக மாறவில்லை, நல்லாட்சி நம்மாட்சியாக மாறும்வரை நாம் ஓயப்போவதில்லை. நாம் சற்று அசந்தாலும் நல்லாட்சி அரசுகூட நமது தலையில் மிளகாய் அரைத்துவிடும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், சனநாயகத் தொழிலாளர் காங்கிரஸின் தொழிற்சங்கத் தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல், அரசகரும மொழிப்பெயர்ப்பு அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

சாய்ந்தமருது  லீமெரிடியன் வரேவேற்பு மண்டபத்தில் இன்று (29) தேசிய சகவாழ்வு மற்றும் தலைமைத்துவ இளைஞர் மாநாடு 2017,  சிமாட் ஒப் சிறீலங்கா அமைப்பின் தலைவர் கே.ஆர்.எம்.றிஸ்கான் தலைமையில் இடம்பெற்றது. பெரும்திரளான இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொலைபேசி அழைப்புவந்தால் அதற்கு பதிலளிக்கமாட்டேன், சமூக ஊடகங்களிலே மக்களுடன் கலந்துரயாடமாட்டேன், மக்களை சந்திக்கமாட்டேன், கோரிக்கைகளை செவிமடுக்கமாட்டேன் என்று சொல்லிக்கொண்டிருந்தால் அந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருக்க லாயக்கற்றவர்கள் என்றும், தான் அங்குபோயுள்ளேன் என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன் என்றும் எப்போது நான் செய்யும் மக்கள் பணி எனக்கு தொல்லையாக தெரிகிறதோ அன்றே நான் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்வதாகவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

தன்னிடம் மிக முக்கியமான தேசிய சகவாழ்வை கட்டியெழுப்புவதற்கான அமைச்சு வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு ஏனைய அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதைப் போன்று பாலம் கட்டுவதோ அல்லது கட்டிடங்கள் கட்டுவதுபோலோ அல்லாமல் மனித மனங்களுக்கிடையே சகவாழ்வை கட்டியெழுப்புவதற்கான பணியை செய்துவருவதாகவும். இன்றைய காலகட்டத்துக்கு அதுவே மிகப்பிரதானமான செயற்பாடு என்றும் தெரிவித்தார்.

இலங்கையில் மூன்று மொழிகளும் நான்கு மதங்களும் பத்தொன்பது இனக்குழுக்களும் இருப்பதாகவும் இவைகள் எல்லாம் சேர்ந்ததே இலங்கை என்றும் ஒருமொழி ஒரு மதம்  என்ற கதை இலங்கையில் இருக்கமுடியாது என்றும், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், தேசிய ஒற்றுமை என்றால் பெரும்பான்மை மொழிக்கும் பெரும்பான்மை மதத்துக்கும் பெரும்பான்மை இனத்துக்கும் கைகட்டி சேவகம் செய்வதுதான் தேசிய ஐக்கியம் என்று சிலர் நினைக்கின்றனர் அது அப்படியில்லை என்றும் கைகட்டி அடிபடுவது என்பது சரணடைவது போன்றது என்றும் தெரிவித்தார்.
ஆண்டானுக்கும் அடிமைக்கும் சமத்துவம் வராது என்றும் ஐக்கியம் என்ற பெயரில் எங்களது மொழியை, மதத்தை, இனத்தை, கலாச்சாரத்தை, பண்பாட்டுவிழிமியங்களை விலைபேசி விற்கமுடியாது என்றும் தெரிவித்தார்.

கட்சிகளுக்கு மத்தியில் முரண்பாடுகள் இருக்கலாம் ஆனால் இனம், மதம், மொழி என்று வரும்போது நாங்கள் ஒன்றுபட்டே ஆகவேண்டும் என்றும் அதுதான் சகவாழ்வு என்றும் சிறுபான்மையினர் ஒன்று சேர்வது சிங்களமக்களுக்கு எதிரானது இல்லை என்றும் பெரும்பான்மை சமூகத்தில் நேர்மையானவர்கள் அதிகம் இருப்பதாகவும் அவர்களுக்குள் இருக்கின்ற சிறுகுழு ஒன்று அந்த மக்களை தவறாக வழிநடத்த முற்படுவதாகவும் தெரிவித்தார்.

இப்போது ஆட்சிசெய்யும் அரசு தொடரவேண்டும் என்றும் இந்த ஆட்சியின் ஊடாகவே உண்மையான சகவாழ்வை உருவாக்கமுடியும் என்றும் தெரிவித்தார்.

நிகழ்வுக்கு அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம், கிழக்கு பிராந்திய கட்டளைத் தளபதி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே. அரசரட்ணம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டதுடன்  அம்பாறை மாவட்டத்தை பிரதிதுவப்படுத்தும் இளைஞர் யுவதிகளும் , பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்களும்  இப்பயிற்சிநெறியில் பங்குகொண்டிருந்தனர்.

இத் தலைமைத்துவ பயிற்சி பட்டறைக்கு தலைமத்துவம் என்றால் எனும் தலைப்பில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.ஐ.எம்.ஜெஸில் மற்றும் தேசிய சகவாழ்வு எனும் தலைப்பில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி றமீஸ் அபூவக்கர் ஆகியோர் கலந்து கொண்டு விரிவுரை நிகழ்த்தினர் அத்தோடு அதிதிகளுக்கு பொன்னாடை போத்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வின் வீடியோ காட்சி கீழே தரப்படுகின்றது 

 http://www.tv.kalasem.com/2017/01/blog-post_72.html
https://www.facebook.com/kalasemnet/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget