www.kalasem.com

Latest Post

'பள்ளிவாசலை இடித்து அதனை இடமாற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.- ஹரிஸ்.

Written By ramzan on May 2, 2015 | 12:32 AM

(எஸ்.எம்.எம்.றம்ஸான் )
பலாங்கொடை கூரகல ஜெய்லானி பள்ளி வாசலை இடித்துவிட்டு  அதனை வேறு இடத்துக்கு மாற்ற முடிவெடுத்துள்ள தீர்மானம் ஏற்றுக்கொள்ள முடியாத, கண்டிக்கதக்க செயற்பாடாகும் என்று  நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மருதமுனையில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார். 

மருதமுனையில் சனிக்கிழமை (25) இடம்பெற்ற புத்தக வெளியீடும் கௌரவிப்பு நிகழ்விலும் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இந்த நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்  அமைச்சருமான றவூப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹசன் அலி, நாடாளுமன்ற உறுப்பிளர் பைசல் காசீம், மாகாண அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 

இங்கு நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தொடர்ந்தும் உரையாற்றுகையில்.............

இந்நாட்டில் முஸ்லிம்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட பல செயற்பாடுகள்தான், கடந்த அரசாங்கம் ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்படுவதற்கு காரணமாக அமைந்தது. இன்று நல்லாட்சி என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது இனவாதிகளின் விருப்பத்துக்கு தீனி போட்டது போன்று ஜெய்லானி பள்ளிவாசல் இடிக்கப்பட்டு அது வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. 

இந்நாட்டின் கலாசார இராஜாங்க அமைச்சர் நந்தமித்திர ஏக்கநாயக்க இவ்வாறான ஒரு முடிவை அறிவித்திருப்பது கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற முஸ்லிம் விரோதப் போக்கின் வடிவம் மீண்டும் ஏதோ ஒரு கோணத்தில் செயல்வடிவம் பெற்று வருவதைக் காட்டுகின்றது. இந்நாட்டு முஸ்லிம்களின் பாரம்பரிய வரலாற்று தொன்மை மிக்க ஜெய்லானி பள்ளிவாசல் இடிக்கப்படுவதையோ அல்லது அது வேறு இடத்துக்கு இடம் மாற்றப்படுவதையோ எக்காரணத்தைம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. 

தம்புள்ள பள்ளிவாசல் தொடக்கம் நாட்டின் பல பள்ளிவாசல்கள் மீதும் இனவாத அமைப்புக்கள் பிரச்சினைகளை ஏற்படுத்தி,  அப்பள்ளிவாசல்களை அகற்றுவதற்கு திட்டமிட்ட ஒழங்குகளைச் செய்து வருகின்றனர். இதனை முறியடிக்க நமது முஸ்லிம் அரசியல் சக்திகள் ஒன்றுபட்டுச்செயற்பட வேண்டும். இன்று நாட்டில் அமையப்பெற்றுள்ள நல்லாட்சியை உருவாக்குவதற்காக இந்நாட்டு முஸ்லிம்கள் ஒருமித்த நிலையில் வாக்களித்ததை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமது சமய விழுமியங்களுக்கு தடையை எற்படுத்துவதுடன், அதனை முற்றாக தடுப்பதற்கு எடுக்கும் எந்தவொரு செயற்பாடுகளையும் எந்தவொரு முஸ்லிமும் அங்கிகரிக்க மாட்டான். நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாக ஒன்றுகூடி இந்த விடயத்தை கண்டிப்பதுடன், இந்தப்பிரச்சினைக்குத்  தீர்வினைக் காணவேண்டும். ஜெய்லானி பள்ளிவாசல் விடயத்தில் எந்தவிதமான விட்டுக் கொடுப்புக்கும் இடம்கொடுக்க முடியாது.

 பெரும்பான்மை இனவாதக்குழுக்களின் முஸ்லிம் விரோதப் போக்குக்கு இந்த ஆட்சியாளர்கள் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அரசாங்கத்தின் மீது அதீத நம்பிக்கையை முஸ்லிம் மக்கள் வைத்துள்ளனர். அவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் அமைச்சர் இப்படியான தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது. இந்த விடயத்தில் களத்தில் இறங்கிப் போராடுவதற்கும் தயாராகவே உள்ளோம் என்றார். 

பிரதான செய்திகள்

News+

Vacancy & Notice

Sports

இனிக்கும் இல்லறத்திற்க்கு..

தாயாக நினைக்கும் பெண்களுக்கு....

சிறுவர்களின் உரிமைகள் பேணப்படுவதன் அவசியம்

ஆசானே... நீயும் எனக்கு முதல் தாயே...

Land & Property

Vehicle & Machinery

 
Designed by : KALASEM MEDIA NETWORKS
Copyright © 2011. kalasem.com - All Rights Reserved